Sunday, March 17, 2024

உண்டார்கண்

நியாயப்படிப் பார்த்தால் ராமச்சந்திரனின் மனைவியிடம் இருந்துதான் இந்தக்கதையைஆரம்பிக்கவேண்டும். ஆனால் அது சரியாக இருக்காது என்பதால் ராமச்சந்திரனிடம் இருந்து ஆரம்பிப்போம்( எனில் நியாயம் வேறு, சரி வேறு என்றாகிறதல்லவா, இப்படித்தான் குழப்பத்தின் மொத்த உருவமாக இருக்கிறது வாழ்க்கையின் சாரம்)

ராமச்சந்திரன் என்றதும் நீங்கள் நினைக்கும் அந்த ராமச்சந்திரன் இல்லை. எந்த ராமச்சந்திரன்என்று சொல்லாமல் விட்டுவிட நாம் ஒன்றும் நகுலன்கள் இல்லையே.

இவர் பெங்களூர் ராமச்சந்திரன். சென்ற வாரத்தின் வெள்ளிக்கிழமையன்று பணியிலிருந்துஓய்வு பெற்றிருக்கிறார்.

ஒருவாரமாக என்னை பெங்களூர் வரச்சொல்லி அழைத்துக்கொண்டே இருந்தார். சொல்லப்போனால் கடந்த பத்தாண்டுகளாக இப்படி அவ்வப்போது அழைப்பார். பத்திற்கு இரண்டு பழுதில்லை என்பதுபோல் அவ்வப்போது போய் வருவேன்.

வந்திருக்கிறேன்.

அது தென்பெங்களூர் காக்ஸ்டவுனில் இருக்கும் மதுக்கூடம்.

மதிய நேரம் என்பதால் சிப்பந்திகள் சற்று சோம்பலான உடல்மொழியில் பொருட்களை எடுத்து வைத்துக்கொண்டிருந்தார்கள். இன்னும் நான்கு ஐந்து மணி நேரங்கள் தான் இப்படி மெதுவாக அவர்களால் நடமாட முடியும். மாலை ஐந்து ஆறு மணியில் இருந்து கூடத் துவங்கும் கூட்டம் இரவு முழுக்க நீளும்.

நல்ல விஸ்தாரமான நீண்ட கூடம் அது. மேற்கூரை உச்சியில் இருந்து இரண்டுபக்கமும் சரிந்து இருந்தது. சுவருக்கு அருகே மட்டும் மெத்து மெத்தென்று அமரும் இடம். மற்ற நாற்காலிகள் எல்லாம் மரம்,இரும்பு இத்தியாதிகளால் ஆனவை. உயரமான ஸ்டூல்கள். ஆங்கிலப்படங்களின் சுவரொட்டிகளில் நாயகியின் நீள்கால்கள் மட்டும் பிரதானமாகக் காட்சியளிக்கும் சுவரொட்டிகளை நினைவுபடுத்தின, அந்த உயரமான ஸ்டூல்கள்.

ராமச்சந்திரன் வருவதற்கு அரைமணி நேரம் ஆகும் என்ற செய்தியை சொல்வதற்கு அழைத்தவர், பெங்களூர் சாலை நெரிசல் எப்படியெல்லாம் ஒரு மனிதனின் அன்றாடத்தை மாற்றும், திட்டமிடவைக்கும் என்பது போன்ற உபதகவல்களோடு விவரித்து முடிக்கும்போதே அரைமணி நேரம் ஆகிவிட்டதைப்போல் இருந்தது. ஆனால் வெகுகவனமாக, ’நீ வேண்டுமானால் குடிக்க ஆரம்பி’ என்று சொல்லவதைத் தவிர்த்திருந்தார்.

ஒத்த வயதுடைய நண்பர்களைத் தவிர, இப்படி நம்மை விட பத்து இருபது வயது மூத்தவர்களுடன் பாராட்டப்படும் நட்பில் இருக்கும் சிக்கல்களில் இதெல்லாம் சர்வ சாதாரணம்.

நான் அந்தப் பஞ்சு நாற்காலியில் பொதிந்துகொண்டு இன்னொரு முறை நோட்டம் விட்டேன்.

நேர்த்தியான அமைப்பு. எனக்குப் பின்னாலும் பக்கவாட்டிலும் புத்தகங்களை அடுக்கி வைத்திருந்தார்கள். எல்லாம் ஆங்கிலப் புத்தகங்கள்.

திரும்பிய பக்கமெல்லாம் புத்தக அலமாரி, பஞ்சுப்பொதிபோல் அமர்ந்து சரியும் இடம் என வாழ்வின் பிற்பாதியை எப்படிக் கொண்டாடவேண்டும் என்று நினைத்துக்கொண்டிருக்கிறேனோ அப்படி ஒன்றின் ஒத்திகை போல் இருந்தது அந்த மதுக்கூடம்.

இஸ்ரோ எனத் தொலைக்காட்சியில் காட்டும்பொழுதெல்லாம் திரையின் மூலையில் புறப்படத்தயாராக இருக்கும் இயந்திரத்தின் சிறிய வடிவம் போல கண்களின் முன்னே ஆங்காங்கே ‘டவர்’கள். அதை மிக நேர்த்தியாக நிரப்பிக்கொண்டிருந்தார்கள். வீட்டில் ’ஆர் ஓ நீரேற்றம் நிகழ்வது போல் இருந்தது அந்தக் காட்சி.

ராமச்சந்திரனிடம் இருந்து ஆரமிக்கிறேன் என்று சொல்லிவிட்டு மதுக்கூடத்தில் இருந்து ஆரம்பித்திருக்கிறேன் பாருங்கள். சொல்லப்போனால் இரண்டும் ஒன்றுதான். இப்படி ஒரு மதுக்கூடத்தில்தான் நிகழ்ந்தது அந்த சந்திப்பு. பத்து வருடங்கள் ஆகின்றன. அலுவல் நிமித்தம் அவ்வப்போது பெங்களூர் செல்வதுண்டு என்றாலும் அதிகாலையில் துவங்கி பின்னிரவில் வீடு வந்து சேர்ந்துவிடும் வண்ணம் ஒரே நாளில் அந்த நாளே பறக்கும் பயணங்கள் தான் பெரும்பான்மை.

அன்று, பிந்தைய வருடத்தின் எண்ணிக்கையில் உச்சம் தொட்டதை கொண்டாடும் வகையில் சென்ற இடத்தில் தான் ராமச்சந்திரன் அறிமுகம் ஆகி இருந்தார்.

முதல் நரை பயத்தைக் கொடுக்கும் எனில் பக்கவாட்டில் பரபரவென பரவியபின் அந்த நரைமுடி ஒரு திமிரைக் கொடுக்கும். அப்படி ஒரு திமிர் பார்வை தெரிந்தது அவரிடம் அன்று. மிடுக்கான ’மூன்றுதுண்டு சூட்’ அணிந்திருந்தவர், பின்னிரவில் மூன்றில் ஒன்றைக் கழட்டி

பக்கவாட்டில் இருந்த நாற்காலியில் வைத்திருந்தார். கோட்டுக்கு உள்ளே அணியும் உடுப்போடு அவர் இருந்ததும் அவருக்கு அருகே மதுவை பரிமாறிக் கொண்டிருக்கும் சிப்பந்தியின் உடையும் ஒரேபோல இருந்தது. நான் இரண்டு மேசைகள் தள்ளி அமர்ந்திருந்தவன், அதைப் பார்த்து என் அருகில் இருந்த அலுவலக நண்பரிடம் அதைச் சுட்டிக்காட்டி சிரித்தேன்.

சற்று நேரத்தில் பீர் சிறுநீராக அதன் மாற்றத்தை நோக்கி உந்த, மிகச்சரியாக அந்த நீண்ட கழிவறையின் ஓரத்தில் நின்று நிமிர்ந்து மேற்கூரை நோக்கி ஏகாந்தத்தில் இருந்தவர்

“தமிழா?” என்றார். குனியவில்லை, திரும்பவில்லை.

நான் குழப்பமாகப் பார்க்க

அதட்டலான ஆங்கிலத்தில் உன்னைத்தான் கேட்கிறேன், தமிழா என்றார்.

நான் அவரைக் குறித்து சொன்னதை அவர் உணர்ந்ததாகவும், இது போன்ற த்ரீ பீஸ் சூட்கள் பற்றிய அருமை தெரிந்தவர்களுக்கு அது எவ்வளவு தரமான ஒன்று என்றும் விளக்கி ராமச்சந்திரன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். எண்கள் பறிமாறிக்கொள்வது எண்ணங்களைப் பரிமாறிக்கொள்ளத்தான் என்பதுபோல் ஏதோ சொன்னார்.

ஏதோ சொல்கிறார் என்றுதான் நினைத்தேன். ஆனால் இத்தனை ஆண்டுகளாக, உண்மையிலேயே அவர் எண்ணங்களை, அவர் வாழ்வு குறித்த நிகழ்வுகளை என நிறைய பேசிப் பேசி, எனக்கு ஏதேனும் அறிவுரையோ, ஆறுதலோ, உதவியோ வேண்டும் எனில் அவரிடம் கேட்கலாம் என்று சொல்லும் அளவிற்கு ஆகி இருந்தார். அவருடைய பழக்கத்திற்குப் பிறகு அடிக்கடி பெங்களூர் கிளைக்குப் பயணப்பட்டேன். என்னுடைய ஒரு நாள் பயணத்திட்டம் என்பது இரண்டு அல்லது மூன்று நாட்கள் என்றாகின.

அலுவல்களை முடித்துக்கொண்டு, பின்மாலையில் அவரை அழைத்தால் வந்து வண்டியில் ஏற்றிக் கொள்வார்.

முதலில், அதாவது எங்கள் நட்பின் தேனிலவு நாட்களில் ஆர்வமிகுதியில் கால்களுக்கிடையே கதிர்விளக்குகள் பாய்ந்து சத்தமிடும் பப்களுக்குச் சென்று அந்தக் கூச்சலில், அங்கு ஆட்டம் ஆடும் பெண்கள், ஜோடிகள் என பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, அவரோடு வீட்டிற்குப் போய், அவர் இறங்கிக்கொள்ள அவருடைய ஓட்டுநர் என்னை என் அறையில் இறக்கி விடுவார். சில நாட்கள் அங்கேயே தங்கச் சொல்லிவிடுவார்.

காதுகளுக்கு இரைச்சலும் கண்களுக்கு ஆட்டங்களும் சலித்தபின்தான், இதோ இந்த காக்ஸ்டவுன் மதுக்கூடம் போன்ற அமைதியான இடங்களில் அமர்ந்து குடித்துக் கொண்டேபேசத்துவங்கி இருந்தோம். நாளடைவில் பேசுவதுதான் பிரதானம் என்றானது. குடியின் அளவு பெயரளவில்தான்.

ஒவ்வொருமுறையும் ஏதேனும் ஒரு சுவாரஸ்யமான நிகழ்வைச் சொல்லுவார். அவருடைய அலுவலகத்தில் ஏற்பட்ட சிக்கல், அதை அவர் விடுவித்த விதம் என. போலவே, சில ஆண்டுகளுக்கு முன்பே என்னைப் பார்த்திருந்தால், அவர் மகளை அமெரிக்காவில் கட்டிக்கொடுக்காமல் எனக்கே  கொடுத்திருந்திருப்பார் எனும் வாசகம் தவறாமல் இடம்பிடிக்கும்.

“நம்ம ஊர்ல இருந்து பெங்களூர் வந்து இந்த ஊரயே கலக்குறாங்க நம்ம பசங்க. நான்லாம் வரும்போது இந்த ஊர் குளிரத் தாங்கவே முடில, ஊருக்கேப் போய்றலாம்னு தோணும், ஆனா இப்போ பசங்க,பொண்ணுங்க எல்லாம் வேற லெவல்ல வந்து செட்டில் ஆகிர்றாங்க லுக் அட் தேர்”

       சென்ற முறை அப்படி அவர் சொல்லி என்னைப் பார்க்கச் சொன்ன காட்சி, நிகழ்வு இங்குதான் இதே இடத்தில் அமர்திருக்கும்பொழுதுதான் நடந்தது. சென்ற முறை என்றால், அது மூன்று வருடங்களுக்கு முன்பு. ஆம். சமீபமாக வருவதில்லை. இன்று கூட அவர் ஓய்வுபெற்றபிறகு மனது ஒருநிலையில் இல்லை, ஒருவேளை நீ வரவில்லை என்றால் நான் வருகிறேன் அங்கு என்று அவர் கேட்டது ஒருமாதிரி ஆனதால், வந்திருக்கிறேன்.

மூன்றாண்டுகளுக்கு முன்னர் அவர் சுட்டிய காட்சியின் நாயகி கையில் சிகரெட்டை வைத்து, இங்குமங்கும் பற்றவைக்க நெருப்பைத் தேடிக்கொண்டிருந்த காட்சி.

“அந்தப் பொண்ணு நம்ம தமிழ்தான்”

நான் இல்லை என மறுத்தேன். என்னதான் நம் பெண்கள் நவயுகநவநாகரீக உடையில் இருந்தாலும் ஓர் ஓரத்தில், ஏதேனும் ஒன்றில் நான் தமிழ் என்று காட்டிவிடுவார்கள். அந்தப் பெண்ணின் உச்சிமுதல் பாதம்வரை பெங்களூர் படர்ந்திருந்தது.

“எவ்ளோ பெட்?” என்றார் தீர்மானமாக. அந்தப் பெண் பஞ்சாபியாக இருக்கும் வாய்ப்பு அதிகம் என்றேன். சுத்தமான தமிழ்ப்பெண் என்றார்.

ஓர் அலுவகத்தின் மிக உயர்ந்த பதவியில் இருக்கும் அவரும், இடைநிலையில் இருக்கும் நானும் இப்படி ஒரு பெண்ணைப் பற்றிப் பேசுவது சரியா, தகுமா எனும் எண்ணம் எழுந்தது. அவரிடமே கேட்டேன்.

சிரித்தார். ஆமோதித்தார், பொதுவெளியில் இடர்படும் பெண்கள் குறித்து அவர்களின் மொழி நடை உடை கலாச்சாரம் இன்னது இத்தியாதிகள் பற்றியெல்லாம் பேசுவதென்பது கற்காலத்திற்கும் முந்தைய காலம் நோக்கிப் போவது போல்தான் என்றேன். ஆமோதித்தார்.

இந்த உலகம் தோன்றியதே செக்ஸால் தான் என்றார். காமத்தின் பல்வேறு நிலைகள், வயது ஆக ஆக மாறிக்கொண்டே போகும் என்று மிக நீண்ட சொற்பொழிவு ஒன்றை நிகழ்த்திக்கொண்டிருந்தார். அந்தப் பெண் தன் நான்காவது சிகரெட்டைப் பற்ற வைத்திருந்தாள். ஆம் நான் கவனித்துக் கொண்டேதான் இருந்தேன். தன் அருகில் இருக்கும் நபரிடம் அவள் பேசுவது வைத்து அவள் தமிழ் அல்ல என்று ராமச்சந்திரனிடம் சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் அதற்கான வாய்ப்பே அமையாமல் சிகரெட் புகையும்விரல்களும் அதே விரல்களால் சிகரெட்டை இடுக்கிக்கொண்டே கோப்பையை எடுத்து உதட்டில் பொறுத்தி வைப்பதற்கும் மட்டுமே வாயைத் திறந்து கொண்டிருந்தாளேத் தவிர ஒரு சொல்கூட உதிர்க்கவில்லை. அருகில் இருந்தவன் அவளிடம் ஏதோ பேசிக்கொண்டேதான் இருந்தான்.

என் கவனத்தை அவர்பக்கம் திருப்பும் பொருட்டு மேசையைத் தட்டியபிறகு அவர் சொன்னதுதான் குழப்பமான ஒன்று. ’காமத்திற்காக அவமானத்தைச் சகிப்பது’ எனும் அந்த வாக்கியம் எனக்குப் புரியவில்லை. அவரிடம் கேட்டதற்கு போதை தலைக்கேறிவிட்டதாகவும் இன்னொருநாள் விளக்குவதாகவும் சொன்னார். வயதானால் புரியும் என்றார். யாரேனும் ஒருவர்மீது மைய்யல் கொண்டு அவர் பின்னால் போகும் காலம் எனக்கும் இல்லை அவருக்கு இல்லை பிறகு ஏன் இப்படி சொல்கிறார் எனத் தோன்றியது.

முடித்துக்கொண்டு படி இறங்கும்போது நன்றாக இருட்டி இருந்தது.

அவருடைய வண்டியில் ஏறிக்கொண்டு என்னை இறக்கிவிட்டுவிடுவதாக அழைக்க, எனக்கு இன்னும் கொஞ்ச நேரம் அங்கு இருக்க வேண்டும் என ஏதோ ஒன்று உந்த, (ஆம் நீங்கள் நினைப்பதுதான்) அவரை வழி அனுப்பிட்டு அங்கே நின்றேன். பீடாக்கடைக்காரர் என்னை அடையாளம் கண்டு சிரித்தார். விரல்களால் வெற்றிலையின் ஒருபகுதியை நீவிக்காட்ட, இல்லை இப்போது இல்லை இன்னும் நேரம் இருக்கிறது என்பதுபோல் சொல்லிவிட்டு மீண்டும் படி ஏறினேன்.

அவளைக் காணவில்லை. அந்த ஒரு வழிதான் இருக்கிறது என்று ஆணித்தரமாக தெரிந்தாலும், அந்த ஒருவழிதானா என சுற்றிலும் பார்த்தேன். ஒருவழிதான். அந்த இளைஞன் இருக்கிறானா என்று பார்க்கலாம் எனில் அவன் முகமே என் மனதில் பதிந்திருகக்வில்லை. பார்த்திருந்தால்தானே எனத் தோன்றியது.

ராமச்சந்திரன் சொன்ன, காமத்திற்கு அவமானப்படுதல் எனும் வாக்கியம் வேறு மனதை அரித்தது. ஒருவேளை இதுதானோ, இப்படி இந்த செங்குத்தான படியில் ஏறி இப்படி இங்கு நின்று அந்த சிப்பந்தி இரண்டு முறை என்ன வேண்டும் அமருங்கள் என்று சொல்லியும் எதையோ தேடிவந்ததுபோல் அலைபேசியை நோண்டுவது போல் நண்பர் இருந்தாரே எங்கே என நானே வழியனுப்பி வைத்த நண்பரைப் பற்றி கேட்பதுபோல் இப்படி எல்லாம் செய்வது அவமானங்களின் வகையில் வருமா? ஒருவேளை அந்த சிப்பந்தி நான் அந்தப்பெண்ணிற்காக வந்து இப்படி நிற்கிறேன் எனத் தெரிந்துகொண்டுவிட்டு,என்னைப் பார்த்து நக்கலாகச் சிரித்தால், அது அவமானம்தான். ஆனால் இது காமத்திற்காக அவமானப்படல் வகையில் வருமா எனத் தோன்றியது. வராமல்? என்றும் தோன்றியது.

நல்லவேளையாக வந்தாள். எங்கோ மூலைக்குள் இருந்து வந்தாள். அந்த மூலையில் என்ன இருக்கிறது என்று தெரியவில்லையே. என்னவாக இருந்தால் என்ன, இவள் இருக்கிறாளே எனத் தோன்றியது.

அதுவரை இல்லாத பதற்றம் வந்தது. இவளைப் பார்க்க வந்தோம். இவள் இல்லை, சரி இப்போது வந்துவிட்டாளே, என்ன செய்வதற்கு வந்தோம். தனியாக அவள் முன் அமர்ந்து குடிக்கவா? எனநினைத்துக்கொண்டிருக்கும்பொழுதே அவள் வெளியே செல்லும்முஸ்தீபுகளில் இருப்பது தெரிய, மெதுவாக வெளியேறி மின் தூக்கியின் எதிரே நின்றுகொண்டேன். அவள் அருகில் வரும்வரை அலைபேசி உதவியது.

வந்தவள் “தமிழா நீங்க” என்றாள், சுத்தமான தமிழில்.

என்னவெல்லாமோ பேசி இருக்கலாம்தான் தான். ஒவ்வொரு முறை அந்தக் காட்சி நினைவிற்கு வரும்பொழுதும் மூன்று நான்குபக்க இலக்கியவாதியின் வாதையான கட்டுரைகள் அளவிற்குப் பேசி இருக்கவேண்டிய சொற்கள் எல்லாம் என் முன் நடனமிடும். ஆனால் அன்று நாக்குதான் நடனமிட்டது.

ஆம் என்பதைக் கூட எங்கள் ஆங்கிலேய அதிகாரியின் வாய் இளிப்புபோல் ஒருமுறை இளித்து ஆமோதித்து பட்டென சுருக்கிக்கொண்டேன். அந்த அதிகாரிபோலவே பல் வெளியில் தெரியாமல் அப்படி நான் செய்தது எனக்கே வியப்பாக இருந்தது.

அவள் மீண்டும் ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்து ஊதினாள். என் முகத்தில் படர்ந்து கடந்தது அந்தப் புகை. அவள் உள்ளே நுழைந்து நான் தாமதிக்க, கையை வைத்து வருகிறாயா இல்லையா என்பதுபோல் பார்க்க, அலைபேசியில் ஏதோ அதிமுக்கிய அலைப்பு என்பதுபோல் பாவனை செய்து அவளைப் போகச்சொன்னேன். சிகரெட் புகை கதவடைபடும் முன்னர் குப்பென வெளியில் வந்து முகத்தில் அடித்தது. அப்படியே தடதடவென படிகளில் இறங்கி அவள் முன் நிற்கலாமா என ஒரு நொடி யோசிக்கும்பொழுதுதான், அவமானப்படல் எனும் சொற்பதம் மீண்டும் நினைவிற்கு வந்தது.

ராமச்சந்திரன் வந்து என் எதிரே அமர்ந்து, சிரித்தார். மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டதை நினைவுகூர்ந்தார். மூன்றாண்டு முந்தைய நிகழ்வைத்தான் யோசித்துக்கொண்டிருந்தேன் என்பதை சொல்லவில்லை அவரிடம்.

அவர் முகத்தில் ஒருவித சோகம் தெரிந்தது. அல்லது அவர் ஓய்வு பெற்றுவிட்டார் என்பது எனக்குத் தெரிந்ததால் அவர் முகம் அபப்டி இருப்பது போல் இருந்திருக்கலாம்.

வழக்கமான உற்சாகத்தோடும், தாமதம் ஆனதற்கு சாலை நெரிசல் காரணம் என்றும் சொல்லிவிட்டு, பெரிதாக வேறு எந்த சம்பிரதாயமும் இல்லாமல் குடிக்கத் துவங்கினோம். மசாலா அப்பளமும் அதன் மீது நறுக்கிப் போடப்பட்ட பச்சைமிளகாயின் முனைகளும் காரமும் உப்புமாய் உள்ளிறங்கி கொண்டிருந்தது அந்த மதியம்.

அவரைத் தவிர்த்ததன் காரணம் குற்றவுணர்ச்சி என்று அதுநாள்வரை நான் நினைத்திருந்த ஒன்று, ஏனெனில் அவர் மனைவியுடனான என் நட்பு குறித்து அவருக்குத் தெரிந்துவிட்டது என்று சொல்லிருக்கிறாள். அவருக்குத் தெரியும் என்ற நொடியில் இருந்து நான் வருவதை நிறுத்திவிட்டிருந்தேன்.

இதோ அவர் முன் அமர்ந்திருக்கும் இந்த நொடியில்தான் அது அவமானம் போன்ற ஒன்று எனத் தோன்றியது.

அதனால்தான் இக்கதையின் தொடக்கவரியில் எங்கிருந்து தொடங்குவது நியாயம் என்று சொல்லியிருந்தேன்.

போய்ப் பார்த்துவிட்டு வந்தீர்கள் அல்லவா, சரி விடுங்கள்,

’தொடர்ந்து பெங்களூருக்கு வந்து போனாயே, என்னை ஏன் அழைக்கவில்லை’ என

அவர் கேட்கவுமில்லை,

நான் சொல்லவுமில்லை.

*

உயிர்மை

மார்ச்’24

துப்பார்க்குத் துப்பாக்கி : 5

டீக்கடையில் அமர்ந்திருந்தார்கள் உதயனும் சந்திரனும். 

சந்திரனின் முகம் இருண்டு போயிருந்தது. 

டீ மாஸ்டர், எதிரே இருந்த கருணாகரனின் கடையைப் பார்த்து கைய ஆட்டிவிட்டு, டீயை எடுத்துப் போனார்.

சலனமே இல்லாமல் அமர்ந்திருக்கும் சந்திரனைப் பார்த்து உதயன் சிரித்தான்.

 “என்ன ஹீரோ, உன் மூஞ்சிக்கும் பாய்லருக்கும் வித்தியாசமே தெரிலயே, கொஞ்சம் தள்ளி நில்லுப்பா”

வாசுவிற்கு சிரிப்பு வந்தது. சிரிக்கவில்லை.

சந்திரன் முகம் இன்னும் இறுக்கமானது. ஏதேதோ பேச நினைத்தான். ஆனால் ஒரு சொல் கூட வரவில்லை.

மாஸ்டர்,கருணாகரன் கடையில் இருந்து இறங்கி வந்து தன் இடத்தை அடைந்தவர், உதயனை ஏறிட்டுப் பார்க்க, உதயன் சந்திரனை நோக்கிக் கையைக் காட்டி,

“இப்ப ஒரு டீ போடுங்க, குடிப்பாரு”

வாசு “லெமன் டீ” என எடுத்துக் கொடுக்க,

“ஆமா, அப்பிடியே லெமன் தோல சார் மண்டைல வச்சுக் கரகரனு தேய்ச்சுக் குளிச்சா தெளிஞ்சுரும், என்ன வாசு?”

சந்திரன் இல்லை என்பதுபோல் தலையாட்டினான்.

உதயன் அவன் தோளைத் தொட்டு, 

“தம்பி, சொன்னேன்ல்ல. யோசிச்சுட்டு வா, வந்துட்டு யோசிக்காதனு”

சந்திரன் ஆமோதிப்பது போல் தலையசைத்து, திரும்பிக்கொண்டான்.

சற்று முன் நிகழ்ந்த நிகழ்வு அவனுக்குள் ஒரு சிறிய அச்சத்தை அல்லது வெறுப்பை அல்லது திகைப்பை ஏற்படுத்தி இருந்தது.

அரசு மருத்துவமனைக்குள் திபுதிபுவென உதயன் தலைமையில் நுழைந்ததே சரியாகப் படவில்லை என சந்திரன் நினைத்தான். சந்திரனையும் வாசுவையும் வெளியே நிறுத்திவிட்டு, கண்ணாடிக் கூண்டிற்குள் தென்பட்ட வயதான பெண் டாக்டரிடம் உதயன் ஏதோ பேசிக்கொண்டிருந்தான்.

சந்திரன் வாசுவிடம், முந்தைய நாளின் மருத்துவமணையில் சேர்த்த பையன்  குறித்து சொல்லி, அந்த முகவரி வெகு அருகில்தான் இருக்கிறது, போய் அவனைப் பார்க்க வேண்டும் என விவரித்துக் கொண்டிருந்தான்.

உள்ளே கண்ணாடிக் கூண்டிற்குள் உதயன் எழுந்து சட்டெனத்  துப்பாக்கியை அந்த மருத்துவரின் நெற்றியில் வைத்து அழுத்த, அப்பெண் ஒருகணம் அதிர்ந்து நிலைதடுமாறி கும்பிட்டக் காட்சி சந்திரனுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

உள்ளே செல்ல எத்தனித்தவனை வாசு தடுத்து வெளியே அழைத்துக் கொண்டு வந்துவிட, உதயன் சற்று நேரம் கழித்து வந்து வெளியில் இருக்கும் டீக்கடையில் இப்படி நின்று கொண்டிருக்கும் இந்த நொடிவரை சந்திரன் மீண்டும் மீண்டும் அப்பெண் மருத்துவரின் அச்சம் மிகுந்த கண்களையும் வயதானப் பெண் அப்படி உயிருக்குப் பயந்து கும்பிட்ட காட்சியும் சந்திரனை ஏதோ இம்சை செய்தது.

“இல்ல சார், இந்தத் துப்பாக்கி இருக்குறதால என்ன வேணா பண்ணலாம்னு சொல்றீங்களா சார்”

சந்திரன் ஆத்திரமாகக் கேட்டான். அப்பாவியாகக் கேட்பதுபோல்தான் உதயனுக்குப் பட்டது.

“ம்ம். விடிஞ்சும் விடியாம இப்பிடி ஹாஸ்பிடல்க்கு எதுக்கு வந்தம்னு நெனச்ச, சுகர் டெஸ்ட் பண்ணவா? , நாம சொல்றபடி ரிப்போர்ட் குடுக்கமுடியாதுன்னு சொன்னாங்களாம் அந்தம்மா, நாமளா இதெல்லாம் சொல்றோம். யார் சொல்றாங்கனு சொன்னேன். எப்பிடி சொல்லனும்னு சொன்னாங்கன்னும் காட்டினேன், அவ்ளோதான்.”

அவ்வளவுதான் என்ற சொல் சந்திரனை யோசிக்க வைத்தது. அவ்வளவுதானா? எல்லாமே இவ்வளவுதானா? 

அப்போது கருணாகரன் காலி டீக் கிளாஸை எடுத்துக்கொண்டு வந்தவன், உதயனுக்கும் சந்திரனுக்கும் நடுவில் புகுந்து கிளாஸை மாஸ்டரின் முன் வைத்துவிட்டு, 

“கடைய பாத்துக்க, அர அவர்ல வந்துர்றேன்” என சொல்லிக்கொண்டே மாஸ்டரிடம் எதுவும் பிரச்சனையா என்பதுபோல் கண்களால் கேட்டான்.மாஸ்டர் எதுவும் புரியவில்லை எனபதுபோல் உதட்டைப் பிதுக்கிக் கொண்டே டீயை ஆத்தினார்.

கருணாகரன் அங்கிருந்து கிளம்பும் வரை யாரும் எதுவும் பேசவில்லை. 

அவன் கிளம்பியதும், சந்திரன்,

“இல்ல சார், எனக்கு ஒரு மாதிரி இருக்கு. டாக்டர நீங்க ஒண்ணும் பண்ணிரலயே”

சந்திரன் கேட்டதும் உதயன் சட்டென டீக்கடைக்குள் பார்க்க, மாஸ்டர் தான் கவனிக்கவில்லை என்பதுபோல் ஈ எனச் சிரித்தார். 

“நம்ம பேர் எழுதிவச்ச அரிசிதான் நம்ம வாய்க்குள்ள போகும். இன்னும் அந்தம்மா பேர எந்தத் தோட்டாலயும் எழுதலபோல”

உதயன் சன்னமான குரலில் சொல்லிச் சிரிக்க, சந்திரனுக்கு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.

 கருணாகரனின் கடை முன் ஒரு பெண் நிற்க, மாஸ்டர் எட்டிப்பார்த்து,

“வெளில போய்ருக்கான்ம்மா” எனக் கத்த, உதயன் தன் காதை மாஸ்டரிடம் இருந்து விலக்கிக்கொண்டு முறைக்க, மீண்டும் ஈ என சிரித்து கடையில் இருந்து வெளியேறி ஓடினார்.

“நீயாம்மா, இப்பத்தான் வெளில போனான். என்னாவாம்”

“தெரியும், போன்ல சொன்னாரு. நீ போ”

என சந்திராம்மா சொல்ல, “ஓஹோ” என ராகம் இழுத்துக் கொண்டு அடுப்பை அடைந்தார்.

உதயனும் வாசுவும் கடையை விட்டு வெளியே வர, சந்திரன் இன்னமும் அதிர்ச்சி விலகாமல் அங்கு நின்று லெமன் டீயின் இறுதியுறிஞ்சலில் ஈடுபட்டிருந்தான்.

“போதும்டா வா”

என உதயன் குரல் அவனை அனிச்சையாக இயக்கியது.

“வாசு, இவன் மந்திருச்சுவிட்ட மாதிரி இருக்கான். கூட இருந்து தெளிய வச்சுக் கூட்டிட்டு வா. நான்” என ஆட்காட்டி விரலை வானம் நோக்கிக் காட்டி, “பாத்துட்டு வர்றேன்” எனக் கிளம்பினான்.

உதயன் கிளம்பும் வரைக் காத்திருந்த வாசு,

“இதுக்கே ஷாக்கானா எப்பிடி, நாம உள்ள நின்னு பேசிட்டு இருக்கும்போது நான் பக்கத்துல என்னல்லாம் இருக்குன்னு நோட்டம் விட்டுட்டே இருந்தேனே எதுக்குனு நினைக்கிற, இந்தாளுபாட்ல பட்டுனு சுட்டுருவாரு. எதவச்சு எப்பிடி ரெடி பண்ணி தூக்குறதுனு”

சந்திரன் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் வாசுவைப் பார்த்தான்.

வாசு, “இப்பவுமே, அந்த டாக்டர் அவ்ளோதான். ஒருதடவ நெத்திய தொட்ருச்சுன்னா முத்தம் வைக்காம விடாது துப்பாக்கி”

“இதுக்கா நாம இருக்கோம், எல்லாத்தையும் தடுக்கத்தான”

வாசு சிரித்து, “அதெல்லாம் தடுப்போம், தடுப்போம், ஆமா ஏதோ அட்ரஸ் காட்டினியே”

சந்திரன் பெரிதாக ஆர்வம் இல்லாமல் அந்தக் காகிதத்தை எடுத்து நீட்டினான்.

“அட, நடேசன் ரோடு, சிட்டி செண்ட்டர்க்கு எதுத்தாப்ள போனா ஆளத் தூக்கிறலாம்”

“அய்யோ ஆள எல்லாம் தூக்க இல்ல. பாவம் எப்பிடி இருக்கான்னு பாக்கணும்”

 “அதுக்குப் பேரும் ஆளத் தூக்குறதுதான்,வா”

என சந்திரன் புல்லட்டின் அருகில் போய் ஏறி அமர வாகாக நின்று கொண்டார்.

சந்திரன் வண்டியைக் கிளப்பினான். அப்போது போனில் பேசிக்கொண்டே மெடிக்கல்ஷாப்பில் இருந்து இறங்கி வந்த சந்திராம்மா புல்லட்டைப் பார்த்து சுதாரித்து பின்வாங்க, ஒருநொடி அதிர்ந்த வாசு, “பாத்துப்போம்மா, போன்ல பேசிக்கிட்டே செத்துறாத”.

சந்திரன் ஒருமுறை வண்டியை நிறுத்திவிட்டு, மீண்டும் கிளப்பினான்.

*

ருபக்கமும் ட்ரை சைக்கிள்கள் ஆட்டோக்கள், லோடு ஏற்றும் வேன்கள் என சென்னையின் பிரதான சிட்டி செண்ட்டர் வளாகத்தின் எதிரே அப்படி ஒரு அடைசல் நெரிசல் மிக்கச் சாலை. சாலை அல்ல அது, சந்து. அப்படியே நேராகப் போனால் திருவல்லிக்கேனி, கொஞ்சம் தள்ளி, கிரிக்கெட் ஸ்டேடியம். கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி பழவண்டிகள், டீக்கடைகளைக் கடந்து போன சந்திரனின் தோளை அழுத்தி ஒரு டீக்கடை வாசலில் நிறுத்தச் சொனனர் வாசு.

“இப்பத்தான குடிச்சோம்”

“அட வாய்யா”

அங்கு மூன்று இளைஞர்கள் நின்று டீ குடித்துக் கொண்டிருந்தார்கள். ஒருவன் கையில் கட்டு, காலில் கட்டு என கட்டுடலோடு நின்றிருந்தான். சந்திரன் உடனே வாசுவைப் பார்த்து சிரித்தான்.

“இவனேதான்”

 “ஆமா நேத்து உயிருக்குப் பயந்து ஓடினானே அப்பவே முகம் மைண்ட்ல ஏறிருச்சு”

சந்திரனைப் பார்த்ததும் அந்த இளைஞன் மகிழ்ச்சியாக “சார், சார்” எனக் கூவினான்.

“டேய் சொன்னேன்ல, என் உசுரக் காப்பாத்துனாருனு, சார்தான்”

கூட இருந்த இளைஞர்களும் உடனே மரியாதையான உடல்மொழிக்கு மாறினார்கள்.

“அட இப்ப ஓக்கேயா, சும்மா ஒரு கேஸ் விசயமா இந்த ஏரியாக்கு வந்தோம், நீங்க எங்க இங்க?”

என அவர்களைப் பார்த்து சந்திரன் கேட்க, வாசு குழப்பமாக சந்திரனைப் பார்த்தார்.

சந்திரன் வாசுவைத் தவிர்த்துவிட்டு,

“இதான் சார் எங்க அட்டி” என ஒருவன் சொல்ல மற்றவர்கள் பெருமிதமாக நின்றார்கள்.

“ஓஹ், சரி இங்க வா” என கட்டுடலை அழைக்க, அவன் காலில் கட்டி இருந்த பேண்டேஜ் விலகிவிடாமல் மெதுவாக அடி எடுத்துவைத்து வந்தான்.

சந்திரன், அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில், “ஆமா, நேத்து நான் போன் பண்ணவுடனே ஒருத்தங்க வந்தாங்க. அவங்க நம்பர் வேணுமே”

அதுவரை மிகுந்த பவ்யமாகவும் அன்பான முகபாவனையோடும் இருந்த இளைஞன் சட்டென சந்திரனின் கையைத் தட்டிவிட்டு,

“எதுக்கு சார், இப்ப எதுக்குக் கேட்குறீங்க? அந்த பசங்களோட சண்ட வந்ததே இதுக்காகத்தான். அவ்ளோ அடிச்சானுங்க, அப்பக்கூட நான் எப்பிடி இருந்தேன்னு பாத்தீங்கள்ள, நீங்களும் எதுக்கு சார் நம்பர் கேட்குறீங்க, ச்ச”

என அவன் கத்தக் கத்த சந்திரனுக்கு அவமானமாக இருந்தது. வாசு சிரிக்கத் துவங்கினார்.

“என்னாச்சு மச்சி” என நண்பர்கள் தள்ளி நின்று கேட்டார்கள். வாசுவின் உடல்மொழி, போலிஸ் என்பதை உணர்த்தி இருந்தது.

 சந்திரன் மிக நிதானமாக,

“இப்ப குடுக்கப் போறியா இல்லையா ப்ரோ”

“சார், நீங்க என்ன உள்ளத் தூக்கி வச்சாலும் பரவால்ல, நான் குடுக்கமாட்டேன், அவ சொந்தக்கார பொண்ணு சார், நல்ல ப்ரெண்டு சார், குடுக்க முடியாது சார்” திமிராகவும் அழும் விதமாகவும் குரல் கம்மியும் விம்மியும் வெடித்தான்.

சந்திரன், “ச்ச ச்ச உள்ளலாம் வைக்கத் தேவ இல்ல, மறுபடியும் ஆஸ்பத்திர்ல சேர்த்தா வருவாங்க ல்ல?”

அவன் குழப்பமாகப் பார்க்க, சந்திரன் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, அரைநொடிக்கும் குறைவான நேரத்தில் ஏதோ செய்தான். 

இளைஞன் சரிய, கூட இருந்தவர்கள் அய்யயோ என ஓட, வாசு அவர்களைப் பிடித்து, “ஆஸ்பத்திரிக்கு வந்துரச்சொல்லுங்கடா அந்தப் பொண்ண” என சொல்லிவிட்டு சந்திரனைப் பார்த்து சிரித்தார்.

சந்திரனின் அலைபேசி அதிர, உதயன் எனச் சரியாகக் கணித்து எடுத்தான்.

 “எங்க இருக்கீங்க ரெண்டு பேரும், அதே ஸ்பாட்தான?”

சந்திரன் தயங்க, போனை வாங்கிய வாசு “சார்” என்றதும்

 “அங்க இருந்து எப்பக் கிளம்பினீங்க வாசு?”

“இப்பதான் சார்”

“அப்ப கிளம்புற வர எதுவும் ஆகல, ரைட், கிளம்பி அதே ஸ்பாட்டுக்கு உடனே வாங்க”

வாசு குழப்பமாகவும் பரபரப்பாகவும் சந்திரனின் புல்லட்டை எடுத்துக்கொண்டு

“நீ இவன ஆட்டோல ஏத்தி ஹாஸ்பிடலுக்கு போ. இன்னைக்கு அங்கயே வெய்ட் பண்ணு, நான் போய்ட்டு வர்றேன்” எனக் கண்ணடித்துக் கிளம்பினார்.

சந்திரனுக்கு, தேஜஸ்வனி மீண்டும் மருத்துவமனைக்கு வரும் காட்சி வந்து கொண்டிருக்கும்பொழுதே, அதை இடைவெட்டி, அந்த டாக்டரின் அச்சம் மிகுந்த கண்களும் நெற்றிப்பொட்டும் தேவையில்லாமல் நிழலாடின.

*

தொடரும்.


Saturday, March 9, 2024

துப்பார்க்குத் துப்பாக்கி - 4

அந்த மருத்துவமனை, மருத்துவமனைக்கென இருக்கும் எந்த விதமான பரபரப்போ அடையாளமோ இல்லாமல், நட்சத்திர விடுதியின் வரவேற்பு அறை போல் இருந்தது. 

சந்திரன், புதிய துறையில் தன் முதல்நாள் இப்படி ஆகிவிட்டதே என நினைத்து அமர்ந்திருந்தான். இப்படி ஆனதிற்குக் காரணமும் அவன்தான். யாரோ ஓர் இளைஞனை சிலர் அடித்திருக்கிறார்கள். என்ன காரணம் எனத் தெரியாது. மயங்கியவனை வாசு சொன்னது போல் நூற்றியெட்டில் ஏற்றி விட்டிருக்கலாம்தான். ஏன் இப்படி ஆட்டோவில் ஏற்றி, உடைகளில் எல்லாம் இப்படிக் கசங்கி, ரத்தக்கறைப்பட்டு, மருத்துவனையில் சேர்த்து, காத்திருக்கிறான். 

தகவல் சொல்லியாகிவிட்டது. வந்ததும் விபரம் சொல்லிவிட்டுக் கிளம்ப வேண்டும். உள்ளே இருந்து வந்த நர்ஸ் சந்திரனைப் பார்த்து ஏதோ கேட்பதற்கு நெருங்கும்போது இருவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது அந்தக் குரல்.

நர்ஸ், அந்தக் குரல் வந்த திசைக்குத் திரும்பி, அங்கு நின்றிருந்த பெண் கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்லி உள்ளே அழைத்துப் போனார்.

இவை அனைத்தும் வெறும் காட்சிகளாக மட்டுமே தெரிந்தது சந்திரனுக்கு. அவர்கள் பேசுவது, இதர உலகச் சத்தம் எதுவும் கேட்கவில்லை. காரணம் அப்பெண்.

மிகப் பதற்றமாகவும், பயத்தோடும் அப்பெண் ஏதோ பேசுவதும் நர்ஸ் பின்னால் உள்ளே சென்றதும் மீண்டும் மீண்டும் சந்திரனின் கண்களில் வந்து போயின.

மனம், தன்னைக் காத்திருக்கச் சொன்ன காரணம் புரிந்தது அவனுக்கு.

ஆம். இதற்காத்தான் காத்திருந்தான் என்பதே சரி. மருத்துவமனையில் சேர்த்துவிட்ட தகவலை அலைபேசியில் அழைத்து சொல்லியாகிவிட்டது, இனி அவர்கள் வந்து இந்த நர்ஸிடம் விபரம் கேட்டு, சிகிச்சை முடிந்து கூட்டிப் போய்விடுவார்கள். உதவி முடிந்தது. அவ்வளவுதான். 

 ஆனால் அந்தக் குரல் அவனுக்குள் ஏதோ ஒன்றை ஏற்படுத்தி இருந்தது. மிகச் சொற்பமான நேரங்களில் இப்படி ஆவதுண்டு அவனுக்கு. இந்த இடம் நமக்கானதல்ல என மனம் நினைக்கும்போதே மூளை அதை செயல்படுத்திவிடும். அதைப் போலத்தான் சற்று முன்னர் அலைபேசியில் அந்தக் குரலைக் கேட்ட மாத்திரத்தில் அது அவனுக் கானக் குரல் எனத் தோன்றியது. இத்தனைக்கும் எண்ணி ஆறேழு சொற்கள் தான். 

காத்திருந்தது வீண் போகவில்லை. இத்தனையாண்டுகாலம் அவன் மனதின் அடியாழத்தில் வீழ்படிவு போல் மிதந்து கொண்டிருந்த ஒரு முகம் அவளுக்குக் கச்சிதமாய் பொருந்தியது போல் இருந்தது. தேஜஸ்வினி என்ற பெயரே அவனுக்குப் போதுமானதாயிருந்தது. 

சற்று முன் தேநீர் அருந்தும்பொழுது, எத்தனை கேர்ள்ப்ரெண்ட்ஸ் என வாசு கலாய்த்தது நினைவிற்கு வந்தது. இதோ இவள் ஒருத்திதான், இவளைத்தான் இத்தனை ஆண்டுகளாக மனம் தேடிக்கொண்டிருந்தது என அவரிடம் சொல்ல வேண்டும் என நினைத்தான். 

இது கண்டதும் காதல் வகை அல்ல, மனதில் இருந்த முகத்தைக் கண்டடைந்த காதல் என்றெல்லாம் நினைத்தபடியே அவளை நோக்கி உள்ளே செல்லத் திரும்பினான். அலைபேசி அடித்தது.

“வந்த அன்னிக்கே இப்பிடி எங்க இருக்கார்னு தெரிலனு சொல்ல வச்சுருக்கியே?”

ஒருமுறை அலைபேசியின் திரையைப் பார்த்தான். அவ்வளவு பரிச்சயம் இல்லை அந்த எண். ஆனால் குரல் நன்கு தெரிந்த குரல்.

“உதயன்”

“சா,சார்”

“ஏழு நிமிசத்துக்குள்ள முன்னால வா”

சட்டென பதற்றம் குடிகொண்டுவிட்டது. வாசுவிடம் சொல்லவில்லை. ஆனாலும் அவர் பார்த்துக்கொண்டுதானே இருந்தார். சொல்லி இருக்கலாமே உதயனிடம்.  உதவி தானே செய்ய வந்திருக்கிறேன் என நினைத்துக்கொண்டே வாசல் நோக்கி ஓடினான். ஓடியவன் ஒரு நொடி திரும்பி, வரவேற்பரை, பணம் செலுத்துமிடத்தில் இருந்தவரிடம், தான் உடனே வந்துவிடுவதாகச் சொல்லிவிட்டு ஓடினான். நீ உடனே வந்தா என்ன, வாராட்டி எனக்கு என்ன என்பதுபோல் அவன் ஓடுவதைப் பார்த்துக் கொண்டே தன் வேலையைச் செய்து கொண்டிருந்தார் பில் கவுண்ட்டரில் இருந்த பெண்.

                 றையில் இருப்பவர்கள் சந்திரனைப் பார்த்ததும் சிரிப்பை அடக்கிக் கொண்டது அவனுக்குத் தெளிவாகப் புரிந்தது. 

உதயன் குரல் மூர்க்கமாக இருந்தது. 

“இப்பத்தான் சட்ட நல்லாருக்கு ஆள் நல்லாருக்கனு சொன்னேன். சொல்லி ஒரு நாலு மணி நேரம் இருக்குமா? இப்பிடி ரத்தக் கறையோட எங்க போய்ட்டு வர்றீங்க ஹீரோ சார்?” 

சந்திரன் ஏதும் சொல்லாமல் வாசுவைப் பார்த்தான். 

“அவரப் பாக்காதீங்க சார், அவரு சொல்லிட்டாரு. நீங்க சொல்லுங்க”

உதயன் கிண்டல் செய்வது போலவும் இருந்தது, கோபமாகப் பேசுவது போலவும் இருந்தது. 

புதிய இடம்,புதிய ஆட்கள், புது சூழல் எனும்போது ஒவ்வொரு நொடியும் வெகுநேரமாய்க் கடப்பது போல் இருக்கும். சந்திரன் நிமிர்ந்து நின்று, 

“ஜஸ்ட் ஹெல்ப் பண்ணேன் சார், ஒரு அட்டாக்”

“வாங்க மனிதருள் மாணிக்கம்”  என்று உதயன் சொன்னதும் எல்லோரும் சிரித்தார்கள்.

உதயன் எழுந்து வந்து சந்திரனுக்கு அருகில் நின்று,

“இங்க நம்ம டீம்ல இருக்குற ஒவ்வொருத்தருக்கும் எத்தன எதிரிங்கனு தெரியாது. அவ்ளோ என்கவுண்ட்டர்ஸ், சண்டைகள், எதிரிகள்னு நிறைய. இப்படி ஏதாவது ட்ராமா பண்ணி நம்மள தனியாத் தூக்கிட்டுப் போய் இந்தக் கையை இங்க வச்சு இந்தக் கால இங்க வச்சு மூட்டைல கட்டிருவானுங்க”

என சந்திரனின் வலது கை இடது கால் இருந்த இடங்களைச் சுட்டினான்.

 “என்ன வாசு, கரெக்ட்டுதான”

“ஆமா சார், நம்ம மார்ட்டின இப்பிடித்தான் மாறுகால் மாறு கை”

என பேசியவரை கை அமர்த்தினான்.

“தெரிஞ்சும் சார மதர் தெரசா வேல பாக்க விட்ருக்கீங்க?”

“நான் நூத்தியெட்டுனு”

உதயன் கையக் காட்டிவிட்டு, சந்திரனை நோக்கி

“இத பார் சந்திரன், இனிமே இப்பிடி தனியா போறதுலாம் வேணாம். தெரிஞ்சோ தெரியாமலோ இந்த டீம்க்குள்ள வந்துட்ட. உன்ன வச்சு எங்கள சுத்திறக் கூடாது எவனும். அதனால”

என கையை பொத்துவது போல் காட்டி விட்டு வாசுவைப் பார்த்து வெளியேறுங்கள் என்பது போல் சைகை செய்ய, எல்லோரும் கிளம்பினார்கள்.

சந்திரன் தயக்கமாக நிற்க,

“எப்பவுமே கூட்டமா வந்து நின்னுட்டு, கூட்டம் கிளம்பினதும் இப்பிடி தனியா நிக்கிறது அநாகரீகம்”

சார்” என விரைப்பாக சொல்லிவிட்டு வெளியே கிளம்பினான்.

உதயன் அவன் பெயரைச் சொல்லி அழைக்க, வெளியே நான்கைந்து அடிகள் வைத்தவன் மீண்டும் உள்ளே சென்றான்.

“யோவ் ரொம்ப நல்லவன் மாதிரிலாம் சுத்தாத. எப்பவும் அலர்ட்டா இருக்கணும். ரெண்டு நாள்ல ஒரு முக்கியமான அஸைன்மெண்ட் இருக்கு, அந்த இடத்துல எங்க எல்லாரையும் தெரியும், நீதான் புதுமுகம். உன்ன வச்சுதான் பண்ணனும். வாசுகிட்ட கேட்டு ரெடியாகிக்க”

“ஸ்யூர் சார்”

என சொல்லிவிட்டு அங்கேயே தயங்கி நின்றான்.

“ம்ம்”

“சார், ஒரு பத்து நிமிசம், அந்த ஹாஸ்ப்.. இல்ல வீடுவரைக்கும் போய்ட்டு..”

உதயன் சிரித்துக்கொண்டே, போய்ட்டு நீ திரும்பி வரும்போது யாரும் இருக்க மாட்டோம், இருட்டுறதுக்குள்ள கூட்டுக்குப் போய்ருவோம். இனிமே நாளைக்குத்தான். போய்ட்டு நாளைக்கு வா”

மகிழ்ச்சியாகத் தலையாட்டிவிட்டு தலைதெறிக்க ஓடினான். வண்டியை எடுத்தவன் நேராக மருத்துவமனைக்கு விரட்டினான்.

                          ரபரப்பே இல்லாமல்தான் இப்போதும் இருந்தது அந்த மருத்துவமனை. சந்திரன் பரபரப்பாகத் தேடினான். யாரைப் பார்த்தாலும் அந்த நர்ஸ் போலவே தெரிந்தது அவனுக்கு. ஒரே சீருடை. ஒரே சிரிப்பு. ஒரே பொறுமை. ஒரே வித முகபாவனை. சட்டென பணம் செலுத்துமிடத்தைப் பார்த்தான். அங்கே ஓர் ஆண் அமர்ந்திருந்தார். பெண் இருந்தாளே, அவளிடம் சொல்லிவிட்டுச் சென்றோமே என்ற யோசனையாக அங்கே சென்றான்.

“சொல்லுங்க சார், பேஷண்ட் நேம் என்ன?”

இல்லை என்பதுபோல் தலையாட்டி, கூண்டிற்கு உள்ளே எட்டிப்பார்த்தான். யாரும் இல்லை.

மீண்டும் சுற்றும் முற்றும் பார்த்தான். 

அவனை நோக்கி அந்த நர்ஸ் வந்துகொண்டிருந்தார். உடனே வேகமாக அவரை அடைந்தான்.

“அவங்க அப்பவே போய்ட்டாங்க சார்”

“வாட்”

“ஆமா சார், சும்மா லேசான இதுதான். ஐவி கூட தேவப்படல. தலைல லேசா அடி அதான் மயங்கிட்டாரு”

சந்திரனுக்கு ஒரு நொடி எதுவும் புரியவில்லை. ஆனால் அவன் இதுபோன்ற சூழல்களை வெகு எளிதாகக் கடப்பவன். ஒரு நொடி கண்களை மூடி யோசித்தவன்,

“ஃபைன். நல்லதாப் போச்சு. அந்தப் பையன் அவங்க கூட வந்தவங்க எல்லாரோட அட்ரஸ், போன் நம்பர் எல்லாம் குடுங்க”

நர்ஸ் அவனை ஏற இறங்கப் பார்த்தார்.

சுதாரித்துக் கொண்டு,

“இல்ல, ரோட்ல அடிதடி, நாளைக்கு என்ன கேஸ்னு பாக்கணும் அதான்”

மறுபடியும் அதைப் போலவே பார்க்க,

“ஹலோ, நான் போலிஸ்”

என்று சொல்ல,

நர்ஸ் சிரித்துக்கொண்டே, “படத்துல எல்லாம் சட்டுனு பர்ஸ் எடுத்து பிரிச்சுக் காட்டுவாங்களே சார், அந்த மாதிரிலாம் நீங்க பண்ணல”

என சொல்லிவிட்டு ரிசப்ஷனை நோக்கி நடந்தாள்.

சந்திரனுக்கு ஒருவித அவமான உணர்வும் சிரிப்பும் கலந்து வந்தது. இதுவே உண்மையான ஒரு குற்றப்பின்னனி விசாரணை எனில் அவன் கேட்கும் விதமே வேறாக இருந்திருக்கும். அப்பெண் பயந்து இருப்பாள். ஆனால் இப்படி தயங்கித் தயங்கி போலிஸ் என்றது கேவலமான ஒன்றாக இருந்திருக்கும்போல என நினைத்துக் கொண்டான்.

அப்பெண் ஒரு காகிதத்தில் முகவரியை எழுதிக் கொண்டு வந்து கொடுத்தாள்.

“அந்தப் பையன் பேரும் அட்ரசும் தான் இதுல இருக்கு, நீங்க கேட்குற அட்ரஸ் இல்ல”

சிரித்தாள்.

மிடுக்காக அந்தத் தாளை வாங்கி உதறி, பார்த்தான்.

“நம்ம ஸ்டேஷன் பக்கம் தான், சிட்டி செண்ட்டர் எதுத்தாப்ள போல”

என சொல்லிக்கொண்டே நர்ஸைப் பார்த்து “தேங்க்ஸ்” என்றான், மிடுக்காக.

“அந்தப் பொண்ணு, அதான் அந்த பேஷண்ட் அட்டெண்டர், அது அந்த ஏரியா இல்ல போல சார், வேற யார் யாரோ பசங்க எல்லாம் வந்துதான் கூட்டிட்டுப் போனாங்க. அந்தப் பொண்ணு வேற பக்கமா போய்ட்டாங்க”

“எந்தப் பொண்ணு?, எனக்கு இவந்தான் வேணும்” என அந்தத் தாளை உதறிக் காட்டிக்கொண்டே வெளியேறினான்.

“அடேய் உதயா, இப்படி பத்து நிமிடத்தில் காரியத்தைக் கெடுத்து விட்டாயே, இந்த நர்ஸ் ஏற்படுத்திய அவமானம் எல்லாம் தேவையா, ச்சை” என புலம்பியவன், வண்டியை எடுக்கும் முன்னர் ஒருமுறை அந்த முகவரியைப் பார்த்தான். நிச்சயம் வாசுவிற்கு அத்துப்படியாகத்தான் இருக்கும் இந்த முகவரி. நாளை கூட்டிக் கொண்டு போய் அலசுவோம் என நினைத்தான். 

அந்தப் பெண் மிக மெதுவாக உள்ளே நுழைந்து பேசியது, பதறியது, நர்ஸ் பின்னால் சென்றது எல்லாம் மிக மிக மெதுவான காட்சிகளாக மீண்டும் ஒருமுறை அவனைக் கடந்து போனது. 

வாசுவை அழைத்து முகவரியைச் சொல்லி இப்போதே போய்ப் பார்க்கலாமா என நினைத்தான். ஆனால் சர்வநிச்சயமாக உதயனிடம் சொல்லிவிடுவார் வாசு. நாள் முழுக்க உதயன் கேலியும் கிண்டலுமாய் ஓட்டுவார் என நினைத்தான்.

நிறைமாத கர்பிணிப் பெண் ஒருவர் மிக மெதுவாக சந்திரனுக்கு அருகில் நின்று பெருமூச்சு விட,

சந்திரன் ஒதுங்கி வழிவிட்டு, அவள் உள்ளே செல்லும் வரை காத்திருந்துவிட்டு, தன் புல்லட்டை உதைத்தான். அந்த சத்தம் ஏற்படுத்திய அதிர்வில் வயிற்றில் கை வைத்துக்கொண்டு திரும்பிப் பார்த்தாள் அப்பெண்.

*



Wednesday, February 28, 2024

துப்பார்க்குத் துப்பாக்கி - 3

 செய்தித்தாள்கள் செந்நிறத்தில் வந்து விழுந்தன. அத்தனை நாளிதழ்களிலும் பரமேஸ்வரனின் இரத்தம். மொத்த ஊடகமும் குவிந்து இருந்த இடத்தில் குரலில் வருத்தத்தை வரவழைத்துக் கொண்டு பேசினான் உதயன். எல்லாத் திசைகளில் இருந்தும் கேள்விகள்.

சீனியர் ஆபிஸரே டிப்பார்மெண்ட் பில்டிங்ல தற்கொலை பண்ணிக்கிட்டார்னு.. நம்ப முடியலயே சார்

உதயன் விரக்தியாகச் சிரித்து

நீங்க எதத்தான் நம்பி இருக்கீங்க? நீங்க நம்பலைங்குறதுக்காக நெஜம் இல்லைன்னு ஆகிருமா?, பரமேஷ்வர் சார் ஏன் தற்கொலை பண்ணிக்கிட்டாருன்னு க்ளியரா எழுதிருக்காருஅவர ப்ளாக்மெயில் பண்ணவன உடனே அரெஸ்ட் பண்ணிட்டோம். இதுக்குப் பின்னாடி வேற ஏதாவது மோட்டிவ் இருக்கான்னு கூடிய விரைவில் கண்டுபிடிச்சிருவோம்

என்கவுண்ட்டர்ன்ற பேர்ல நடந்த மனித உரிமை அத்துமீறல்களுக்கான ஒரு டீம நடத்தினதுக்கான விலைன்னு இந்த சாவ எடுத்துக்கலாமா சார்?”

எடுத்துக்க்கோங்க சார். தாராளமா எடுத்துக்கோங்க.. ஆனா போலிஸ் டிப்பார்மெண்ட் அப்டீன்னா இதான்னு நினைக்கிற பப்ளிக்குக்கும் உங்க மீடியாவுக்கும் கொஞ்சம் வித்தியாசம் இருக்கனும்னு நாங்க காலங்காலமா எதிர்பார்க்குறோம்..

இங்க மொத்தம் 21 ஸ்பெஷல் ஸ்க்வாட்ஸ் இருக்கு. ஒவ்வொன்னும் ஒவ்வொரு விதம். அதுல எங்களோட டாஸ்க்ஃபோர்ஸ் ரொம்ப ஆபத்தான ஒன்னு. ஏழுகோடி பேர் இருக்குற மாநிலத்துல மொத்தமே நாங்க எவ்ளோ இருக்கோம்னு ஒரு நாளாவது யோசிச்சு இருக்கீங்களா? ஏதாவது எழுதி இருக்கீங்களா?

பொதுமக்களா இருக்குற ஒவ்வொரு 632 பேருக்கு ஒரே ஒரு போலிஸ்ன்ற விகிதம் தான்

இன்னைக்கு சூழல். மீடியாவும் பொதுமக்களும் எங்களுக்கு சப்போர்ட்டா இல்லாட்டிஎன்கவுண்ட்டர்களும், அதுக்கு நீங்க சொன்னமாதிரி விலையா இப்படியான தற்கொலைகளும் பலிகளும் நடந்துட்டே தான் இருக்கும். வேற ஒரு ப்ரேக்கிங் வர்ற வரை இதையும் எங்க மண்டையையும் நீங்க உடைச்சுட்டே இருப்பீங்க

என சொல்ல ஒரு சீனியர் ரிப்போர்ட்டர்

“ஒரு தவறுக்கு இன்னொரு தவறு சரின்னு சொல்றீங்களா?”

 இல்லை என்பதுபோல் தலையாட்டிக்கொண்டே பிற கேள்விகளைத் தவிர்த்துவிட்டு உள்ளே நுழைய முற்பட்டான்.

உதயனை நெருங்க முடியாதபடி அவனுடைய டீம் வளையம் அமைத்தார்கள்.

அப்படியும் ஒரு கேள்வி உதயனை நிறுத்தி திரும்பி பார்க்க வைத்தது.

பரமேஸ்வரன் போய்ட்டா அடுத்து அந்த இடத்துக்கு நீங்கதானே சார்.”

அந்தக் கேள்விக்குள் பொதிந்திந்திருந்த அரசியலுக்கு மதிப்புக்கொடுத்து கேட்ட பெண்ணை ஒருமுறை நேருக்கு நேர் பார்த்துவிட்டு வேகமாக உள்ளே நுழைந்தான். மறைந்தான்.

அவன் மனதிற்குள், ராஜீவ் காந்தி இறப்பில், அந்தப் படுகொலையில் எவருக்கெல்லாம் பலன் கிடைத்தது எனும் கேள்வியை அவனுடைய அப்பா எப்போதோ எவரிடமோ கேட்டுக்கொண்டிருந்தது நிழல் போல் மனதில் ஆடியது. குற்றங்களுக்கும் பலனுக்கும் இடையில் ஊசலாடும் சட்டங்களும் சாட்சிகளும் மொத்தமாக அனைத்தையும் நீர்த்துப் போகச் செய்துவிடுகின்றன எனத் தோன்றியது.

பரமேஸ்வரனின் அறை, இப்படி இவ்வளவு அமைதியாக ஒருபோதும் இருந்ததில்லை.

அவரின் இருக்கையில் இன்றே அமர்வதா நாளையா எனும் யோசனையில் இருந்த உதயன், எப்போதும் போல் தன் இடத்தில் போய் அமர்ந்தான்

சார், அதான் அல்மோஸ்ட் அபீசியல் ஆகிருச்சே சார், அங்க ஒக்காருங்க

வாசுவின் குரலில் உண்மையான மதிப்பும் உதயன் அங்கு அமரப்போகும் மகிழ்ச்சியும் தெரிந்தது.

அதுவும் சரிதான், நம்ம நாற்காலிய நாமளே செதுக்கி செஞ்சுக்கனும்

என சொல்லிக்கொண்டே போய் அமர்ந்தான்.

வாசு, யாரோ காலைல இருந்து வெயிட் பண்றதா சொன்னீங்களே, வரச்சொல்லுங்க

சார்

என வாசு விடைத்து நகர்ந்து மீண்டும் வந்தார். அவருடன் ஓர் இளைஞன்.

அறைக்குள் நுழைந்தவுடன் சல்யூட் அடித்தான். வாசு அவன் சல்யூட்டைப் பார்த்துவிட்டு சட்டென அவன் காலைப்பார்த்தார். அட டிப்பார்ட்மெண்ட்தானா என முணுமுணுத்தார்

என்ன வாசு, யார்னே கேட்காம கூட்டிட்டு வந்துட்டீங்க போல

உதயன் வாசுவின் மண்டைக்குள் நுழைந்துபார்த்தவன் போல கேட்டதும் வாசுவிற்கு சிரிப்பு வந்தது.

ஆமா சார், ஆள் ஏதோ சீரியல், சினிமா ஹீரோன்னு நினைச்சேன். ஆளும் ட்ரெஸ்சும் அப்பிடித்தான இருக்கு..ஏதாவது பொம்பள பிரச்சனைன்னு வந்துருக்காரோன்னு

உதயனும் வாசுவும் சிரிக்க, அந்த இளைஞன் சிரிப்பதா வேண்டாமா என்பதுபோல் நின்றிருந்தான்.

கையில் இருந்த காகிதத்தை அவன் நின்றிருந்த இடத்திலிருந்தே கொடுக்கும் படியான அவனுடைய உயரம், உதயனைக் கவர்ந்தது.

வாங்கிப் படித்து,,

சந்திரன்.. ம்ம்ம்ம்..வெல்கம்..டூ சுடுகாடு

என உதயன் சிரிக்க, இப்போது வேறு வழியில்லாமல் சந்திரன் லேசாகச் சிரித்தான்.

நீங்க இருந்த ஸ்க்வாட் நல்லா இருக்குமே, ஜாலியா.. எதுக்கு இங்க வந்தீங்க

சார்

என சந்திரன் கொஞ்சம் தளர்வாகி நின்றான்.

குட், வாசு சந்திரன பாத்துக்கோங்க, நம்ம சட்ட திட்டங்கள சொல்லிருங்க..

வாசு குழப்பமாகப் பார்க்க,

 “அதாவது அப்பிடி எதுவுமே நமக்கு இல்லன்றத சந்திரனுக்கு புரியவைங்க

வாசு சிரித்தார்.

சந்திரன், இந்த க்ரே ஷர்ட் நல்லா இருக்கு. இதே மாதிரி கலர் கலரா வரலாம். நம்ம ஸ்பெஷல் டாஸ்க்ல இனிமே உங்கள முன்னாடி விட்றலாம்..என்ன வாசு, ஏதோ சினிமா ஷூட்டிங் ஹீரோ நிக்கிறாருனு நினைச்சுப்பாங்க, நாம நம்ம ஷூட்டிங்க நடத்திட்டு போய்ட்டே இருக்கலாம்..ஈஸியா

சிரித்தார்கள்.

சார், காலைல நீங்க ப்ரஸ் மீட் பேசினது.. நானும் நிறைய தடவ யோசிச்சுருக்கேன் சார்.. இவ்ளோ கம்மியா நம்ம ஆட்கள் இருந்தா எப்பிடி பாதுகாப்பு குடுக்க முடியும். 7 கோடிக்கு ஒரு லட்சம்ங்குறது ரொம்ப ரொம்ப கம்மியான ratio Sir

உதயன் கலகலவென சிரித்து சட்டென சற்று மூர்க்கமான குரலில்,

சந்திரன், இப்பிடி இருந்தாதான் சரியா இருக்கும். நாட்ல பாதிப்பேர் யூனிஃபார்ம் போட்டு சுத்துனா அப்புறம் இதுக்கு மதிப்பே இல்லாம போகும். அதிகாரம் எப்போ ரொம்ப ஆணித்தரமா இருக்கும் தெரியுமா, அது ரொம்ப ரொம்ப குறைந்த ஆட்கள்கிட்ட இருக்கும்போது மட்டும்தான், புரிஞ்சதா?”

சார்என நிமிர்ந்து நின்று சல்யூட் அடித்துவிட்டு வாசுவின் பின்னால் போனான் சந்திரன்.

அவன் கொடுத்த அந்த ஆர்டரை மீண்டும் ஒருமுறை எடுத்துப் படிக்கத்துவங்கினான் உதயன்.

*

வ்வளவு பெரிய காவல் மைய்ய கட்டிடத்தின் பக்கவாட்டுச் சந்தில்

இருந்த சிறிய டீக்கடையில் வாசுவின் தலை தென்பட்டதும் உள்ளே இருந்த பொருட்களை எடுத்தார் கடைக்காரர்.

அவரிடம் சந்திரனைக்காட்டிசார் பேர் சந்திரன். நம்ம டீம். நமக்கு என்னவோ அதேதான் சார்க்கும்

கடைக்காரர் பணிவாக நான்கு விரல்களை பாதியாக மடக்கி ஒரு மினி சல்யூட்டை அடித்துவிட்டு கல்லாவிற்குப் போனார்.

பாண்டியன் சார் வந்தாப்ளயா?”

ரெண்டு நாளாவே ஆள் வல்லயே சார்

அந்த பதில் எந்த சலனத்தையும் ஏற்படுத்தவில்லை வாசுவின் முகத்தில்.

சந்திரன், சொல்லுங்க எத்தன லவ்வர் ஒங்களுக்கு?”

சார்

வாசுன்னு சொல்லுங்க சந்திரன், சார்லாம் அங்கயோட நிப்பாட்டுவோம்

என கட்டிடம் நோக்கி அனிச்சையாக அவர் கைகள் போய்வந்தன.

லெமன் டீயின் மேல் மிதக்கும் புதினாவை உடனே உறிஞ்சிச்சுவைத்து மீண்டும் டீயிலேயே துப்பினார் வாசு.

சந்திரன் தர்மசங்கடமாக அதைப்பார்த்தும் பார்க்காமல் திரும்பிக்கொண்டான்.

நான் நீங்க, பாண்டியன் அவ்ளோதான். உதயன் சார் என்ன சொல்றாரே அதான் நமக்கு.. அவ்ளோதான். வேற பெருசா எதுவும் யோசிக்க வேணாம்

என மூளை இருக்கும் இடத்திற்கு ஒருமுறை கையைக் கொண்டுபோய்விட்டு வந்தார்.

லெமன் டீ, எப்பிடி.. சும்மா பவுடர்லாம் இல்ல சந்திரன், அங்க பாருங்க

என வாசு காட்டிய இட த்தில் எலுமிச்சைத் தோல் சக்கைகள் கழிவுத் தொட்டியில் வழிந்து கொண்டிருந்தன.

வாசம் நுகர்ந்து டீயை ருசித்தான்.

சரி சொல்லுங்க எத்தன கேர்ள் ப்ரெண்ட்ஸ் ஒங்களுக்கு, ஒரு பத்து இருவது இருக்கும் போலயே

சந்திரன் வெட்கப்படுவது அவன் கண்களில் தெரிந்தது

நீங்க வேற சார்.. பாய்ஸ் ஸ்கூல்.. காலேஜ்ல போலிஸ் ஆகனும்னு வெறி..

டிப்பார்ட்மெண்ட்ல சேர்ந்ததும் சாதிக்கனும்னு வெறி.. அப்பிடியே நாள் ஓடிருச்சு சார்

வாசு

சந்திரனுக்கு புரியவில்லை. பின் உணர்ந்து

வாசு சார்என்றான் சிரித்து.

திடீரென சத்தம் அதிகமாக கேட்டது. கடையிலிருந்து வெளியே எட்டிப்பார்த்தார்கள்.

ஒருவன் மூச்சிரைக்க தடுமாறி ஓடிவந்து கொண்டுருந்தான். அவன் முகமெல்லாம் ரத்தம்.

அவனை நான்கைந்து பேர் விரட்டிக்கொண்டு ஓடினார்கள்.

அந்த சந்தை விட்டு வெளியேறுவதற்குள் அவனை இழுத்து டீக்கடையின் பக்கவாட்டில் போட்டார்கள்.

அதில் சற்று வாட்டசாட்டமாக இருந்த ஒருவன், அடிவாங்கி விழுந்திருப்பவனின் நேர் எதிரே நின்றான்.

அவன் அருகில் இருந்தவன், “பாதி செத்துட்டான், விட்ரு.. இதுக்கு மேல அடிச்சா

செத்துருவான்

அதை காதில் வாங்காத வாட்டசாட்டம், அப்படியே விழுந்துகிடந்தவனின் மார்பில் ஓங்கி மிதிக்..

சந்திரனின் அடியில் கதிகலங்கி விலகி விழுந்தான் அத்தனை பெரிய உருவத்தை சந்திரன் சாய்த்த விதம் வாசுவிற்கு வியப்பாக இருந்தது.

உடன் வந்தவர்கள் சந்திரனை தாக்க ஆயுதம் எடுக்க நினைத்த நொடியில் வாசு பின்னால் இருந்து கத்தினார்,

ஆமாடா, போலிஸ் ஸ்டேசன் வாசல்லயே வந்து போலிஸயே அடிங்க.. பாத்துட்டு இருப்பம்

வாசு சிரிக்க, ஒரு நொடியில் உணர்ந்து,அப்படியே தலை தெறிக்க ஓடினார்கள்.

கீழே மயங்கி கிடந்தவனின் மொபைலை எடுத்து, கடைசியாக அழைத்த எண்ணைப்பார்த்தான்.

தேஜஸ்வினி S H

என்றிருந்தது.

தொடுதிரையைத் தொட்டான்.

 *

-தொடரும்

உண்டார்கண்

நி யாயப்படிப் பார்த்தால் ராமச்சந்திரனின் மனைவியிடம் இருந்துதான் இந்தக்கதையைஆரம்பிக்கவேண்டும். ஆனால் அது சரியாக இருக்காது என்பதால் ராமச்சந்தி...